ADVERTISEMENT

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

12:44 PM Mar 19, 2024 | mathi23

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது.

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT