Parliamentary elections The next announcement was made by the Congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்தப் பட்டியலில் பொதுப் பிரிவில் 15 பேருக்கும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவில் 24 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். சசிதரூர் திருவனந்தபுரத்திலும், கே. முரளிதரன் திருச்சூர் தொகுதியிலும், கே.சி. வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த் காவன் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் போட்டியிடுகிறார். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் 43 மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டவேட்பாளர்கள் பட்டியலை டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (12.03.2024) வெளியிட்டுள்ளார். இதில் அசாம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கமல்நாத்தின் மகன் நக்ல்நாத் மத்தியப்பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிட உள்ளார். அசாம் மாநிலம் ஜோர்கட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கவுரவ் கோகோய் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் சுரு தொகுதியில் அஹுல் கஸ்வா போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.