ADVERTISEMENT

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு; கொண்டாடும் கல்லூரி மாணவிகள்

04:35 PM Feb 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புக்காட்சி

ADVERTISEMENT

மாணவிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் அறிவிக்காத விஷயத்தை கேரள அரசு அமல்படுத்தியதால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும் என்றால், அவர்களின் வருகைப்பதிவு 75 சதவீதமாக இருக்க வேண்டும். அப்படி குறையும் பட்சத்தில் அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக, இத்தகைய நடைமுறை மாணவர்களை விட மாணவிகளுக்கு பெரிய பாரமாக இருக்கிறது.

ஏற்கனவே தவிர்க்க முடியாத காரணங்கள், உடல்நலக்குறைவு போன்றவற்றுக்காக விடுமுறை எடுக்கும் மாணவிகள், மாதவிடாய் நேரங்களில் கண்டிப்பாக இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதனால், மாணவிகளின் வருகைப்பதிவு, சில நேரங்களில் 75 சதவீதத்தை எட்ட முடியாமல் செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்படுகிறது.

இது போன்று மாணவிகளின் வெளியே சொல்ல முடியாத விஷயங்களால், அவர்கள் படும் சிரமங்கள் மாணவிகளுக்குள்ளே புதைந்தும் போயிருக்கிறது. ஆனால், இதைப் புரிந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப, மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு சலுகையாக, கல்லூரி நடைமுறையின்படி 75 சதவீதமாக இருக்கும் வருகைப்பதிவை 73 சதவீதமாகக் குறைத்துள்ளார். அதன்படி, மாதவிடாய் காலங்களில் மாணவிகள் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியமில்லை. மாதந்தோறும் அவர்கள் எடுக்கும் விடுமுறைகள் வருகைப்பதிவை பாதிக்காது. மாணவிகள் கல்லூரிக்கு வந்ததாகவே கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் அறிவிக்காத இந்த அறிவிப்பு கேரளாவில் கொண்டுவரப்பட்டதால் முதல்வர் பினராயி விஜயனை மாணவிகள் கொண்டாடி வருகின்றனர்.

- சிவாஜி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT