Notice against Pinarayi Vijayan, Modi

Advertisment

கேரளமாநிலம் கண்ணூர், வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு அருகே உள்ள வாளத்தோடு டவுன் பகுதியில் திடீரென்று ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் வந்தனர்.

மேலும், மாவோயிஸ்ட்கள்அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வாளத்தோடு டவுனில் சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிகளுடன் அவர்கள் பேரணி நடத்தினார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு நோட்டீஸையும் அவர்கள் கொடுத்தனர். அந்த நோட்டீஸில், உலக வங்கியின் உத்தரவின் பேரில் ரேஷன் பொருட்களை நிறுத்தும் பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இது தொடர்பான போஸ்டர்களையும் மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதியில் ஒட்டினார்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றனர். காட்டுப்பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில்தான் வாளத்தோடு டவுன் பகுதி உள்ளது. இது குறித்து அதிரடிப்படைக் காவல்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வாளத்தோடு அருகே உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால், அவர்கள் நடத்திய அந்தத்தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்டுகள் யாரும் சிக்கவில்லை. துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் பேரணி நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.