ADVERTISEMENT

இரு அரசுப் பள்ளிகளின் மாணவிகளுக்கு இடையே மோதல்-பெற்றோர் முன்னிலையில் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

11:04 PM Sep 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி நகர பகுதி லால்பகதூர் சாஸ்திரி வீதியில் இயங்கி வந்தது சுப்ரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு விடுமுறை நாள் அன்று மேல் கூரை இடிந்து விழுந்தது. இதனால் இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகளை குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி அரசு பெண்கள் பள்ளியில் தற்காலிகமாக படிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 12 ஆம் வகுப்பு படிக்கும் என்.கே.சி பள்ளி மாணவிகளும், சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரண்டு பள்ளி மாணவிகளின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருந்த நிலையில், இன்று காலை பெற்றோர்கள் முன்னிலையிலேயே வகுப்பறையில் மாணவிகளுக்குள் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் கூச்சலிட்டவாறு மாணவிகளை மோதலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை தங்களது பெற்றோர்களுடன் தங்கள் படித்து வந்த பள்ளிக்கே மீண்டும் அனுப்பி வைத்தனர். மேலும் என்.கே.சி பள்ளி மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் போதுமான பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இரு அரசுப் பள்ளி மாணவிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையால் பேட்டை போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT