ADVERTISEMENT

பா.ஜ.க. பெண் பிரமுகரை நம்பி மோசம் போன தொழிலதிபர்!

06:13 PM Sep 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்திருப்பதாக, இந்து அமைப்பின் தீவிர ஆதரவாளரும் பஜ்ரங் தள் தலைவருமான சைத்ரா குந்தாபூர் உள்பட 4 பேரை பெங்களூர் போலீஸ் கைது செய்துள்ளது.

இந்து அமைப்பின் தீவிர ஆதரவாளரும், பஜ்ரங் தள் தலைவருமான சைத்ரா குந்தாபூர், கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி என்பவரிடம், தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், ஒருவரை அழைத்து வந்து அவர்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் விஸ்வநாதன் என்றும், கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளர் என்றும் கூறி கோவிந்த்பாபு பூஜாரிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். விஸ்வநாதன், ‘தான் முடிவு செய்யும் வேட்பாளருக்குத்தான் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவிந்த்பாபுவும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவிக்க, அதற்குக் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் தவணை, இரண்டாம் தவணை என்று சைத்ரா குந்தாபூர் கைகாட்டியவர்களுக்கு எல்லாம் சுமார் 5 கோடிகள் வரை கொடுத்துள்ளார் கோவிந்த்பாபு. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் தொழிலதிபர் கோவிந்த்பாபு பெயர் இல்லாததால் சந்தேகமடைந்த அவர், சைத்ராவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அவர் சரிவரப் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் சைத்ராவிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘ஆர்.எஸ்.எஸ் தலைவர் விஸ்வநாதனிடம் தான் பணம் இருக்கிறது. ஆனால் அவர் வெளியூர் சென்றபோது உயிரிழந்துவிட்டதாக’ கூறியுள்ளார். இதனால் மேலும் சந்தேகமடைந்த கோவிந்த்பாபு, விஸ்வநாதன் குறித்து விசாரணை செய்துள்ளார். அதில், பெங்களூருவில் சாலையோர கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவரைத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் விஸ்வநாதன் என்று கூறி ஏமாற்றியது கோவிந்த்பாபுவுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கேட்டபோது சைத்ரா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் கோவிந்த்பாபு, ‘கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் உடுப்பி மாவட்டம், பைந்தூரில் பாஜக எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக, சைத்ரா குந்தாபூர் உள்பட 7 பேர் தன்னிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக’ பெங்களூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சைத்ரா குந்தாபூர், ககன் கடூர், ஸ்ரீகாந்த் நாயக் மற்றும் பிரசாத் பைந்தூர் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT