ADVERTISEMENT

“சீன பிரச்சனையில் முரண்பட்ட அரசு மற்றும் தளபதி... மிஸ்டர் 56 பயந்துவிட்டார்” - ராகுல் காந்தி விமர்சனம்!

03:41 PM Nov 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன், சீன இராணுவம் மீதான ஆண்டு அறிக்கையை அண்மையில் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இடையேயான பிரச்சனைக்குரிய பகுதியில் 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், சீனா தற்போது கிராமத்தை அமைத்துள்ள இந்திய பகுதியை, அந்த நாட்டின் இராணுவம் 1959ஆம் ஆண்டு கைப்பற்றியதாக தெரிவித்தன.

இந்தநிலையில், நேற்று (11.11.2021) பென்டகனின் அறிக்கை குறித்து விளக்கமளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், "எல்லைப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக சீனா கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் பல தசாப்தங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் அடங்கும். நமது எல்லைப்பகுதியில் நடைபெற்றுள்ள இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவின் நியாயமற்ற கூற்றுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மத்திய வெளியுறவுத்துறை கூறியதற்கு முரணாக சீனா இந்திய பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், சீனர்கள் இந்திய எல்லைக்குள் வந்து கிராமத்தை உருவாக்கினார்கள் என்பதில் உண்மை இல்லை என்றும், அந்தக் கிராமங்கள் மெய்யான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் சீனாவிற்கு சொந்தமான பகுதியில் இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பார்வைபடியான மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை சீனா மீறவில்லை எனவும் பிபின் ராவத் தெரிவித்தார்.

இந்த முரணான கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ப. சிதம்பரமும் இந்த முரண்பட்ட கருத்துகளை விமர்சித்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறையின் கருத்தும், முப்படைகளின் தலைமை தளபதியின் கருத்தும் வேறுபடுவதைச் சுட்டிக்காட்டும் செய்தியின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ள ராகுல் காந்தி, "நமது தேசத்தின் பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவிற்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசிடம் எந்த வியூகமும் இல்லை. மேலும், மிஸ்டர் 56 பயந்துவிட்டார்" என கூறியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி, "இந்திய அரசு பொய்களைக் கூறிக்கொண்டிருக்கும்போது, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களைப் பற்றியே எனது எண்ணம் உள்ளது" என கூறியுள்ளார்.

அதேபோல் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியப் பகுதியில் சீனா ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பில்’ ஈடுபட்டுள்ளதாகவும், ‘நியாயமற்ற சீனாவின் கூற்றுகளை இந்தியா ஏற்காது’ என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. (ஆனால்) சில மணி நேரங்களுக்குள், முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்), நமது பார்வைபடியான மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறவில்லை என்றும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அவர்கள் பகுதியில்தான் உள்ளார்கள் எனவும் கூறியுள்ளார். சீனர்கள் தங்கள் மத்திய குழு கூட்டத்திலிருந்து 20வது தேசிய குழு கூட்டம் வரை சிரிக்கிறார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சகத்தில் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை வரைந்து, அக்கோட்டின் தனக்கு சொந்தமான பக்கத்தில் இருக்குமாறு முப்படைத் தளபதியிடம் கூற வேண்டிய நேரம் இது" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT