ADVERTISEMENT

எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வந்த குறுந்தகவல்; ஆப்பிள் நிறுவனத்துக்கு  மத்திய அரசு நோட்டீஸ்!

01:22 PM Nov 03, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக கடந்த 31 ஆம் தேதி காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். அது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்” என்று தெரிவித்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர். ஆனால், அவர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு (சி.இ.ஆர்.டி), இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.இ.ஆர்.டி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு அவர்கள் (ஆப்பிள் நிறுவனம்) தேவையான ஒத்துழைப்பு தருவார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT