ADVERTISEMENT

மணிப்பூர் கொடூரம் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு

12:54 PM Jul 29, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சியினர், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 7 வது நாளான நேற்று வரை இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கடந்த 27 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் ஆடைகளின்றி இழுத்துச் சென்று துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு நேரில் சென்று இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர். மேலும் இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து 21 எம்.பி.க்கள் கொண்ட குழு டெல்லி விமான நிலையத்தில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT