Skip to main content

பிபர்ஜாய் புயல்; “ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..” - அமித்ஷா 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Bibarjoy Storm; “Not a single person passes away..” - Amit Shah

 

அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் கரையை கடந்தது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 140 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. குஜராத்தில் கரையைக் கடந்த பிபர்ஜாய் புயலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

அதனைத் தொடர்ந்து புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் பேட்டி அளித்தார். 

 

அதில் அவர், “பிபர்ஜாய் புயலால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. புயலால் மின்சாரம் இல்லாமல் இருந்த 1,600 கிராமங்களுக்கு மீண்டும் மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சீர் அமைக்கப்படுவருகின்றன. புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண தொகை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

 

மணிப்பூர் கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்; பரபரப்பில் குஜராத்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Consequences of narcotics in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து படக்கில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணைந்து போதைப்பொருள் கடத்தியவர்களை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.