ADVERTISEMENT

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

11:56 AM Feb 22, 2024 | mathi23

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ADVERTISEMENT

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT