ADVERTISEMENT

தென்னிந்திய மாநிலங்கள் இன்றி நாட்டின் வளர்ச்சியை கற்பனைக்கூட செய்ய முடியாது - அமித் ஷா!

11:53 AM Nov 15, 2021 | rajapathran@na…


ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நேற்று (14.11.2021) ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி முதல்வரும் பங்கேற்றனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சார்பாக அம்மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பாக அமைச்சர் பொன்முடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் நிலுவையில் இருந்த 51 பிரச்சனைகளில் 40 தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சியைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் ஷா பேசியதாவது,

“தென்னிந்திய மாநிலங்களின் பண்டைய கலாச்சாரமும், மரபுகளும், மொழிகளும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்டைய பாரம்பரியத்தையும் வளப்படுத்துகின்றன. தென்னிந்திய மாநிலங்களின் மிக முக்கியமான பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்க முடியாது.

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் விகிதத்தை மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும். அதனை முதலமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பதற்கு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து மாநிலங்கள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். போதைப்பொருள் நெட்வொர்க்குகளை மாநிலங்கள் ஒடுக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மாநிலங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்து மாநிலங்களும், உள்ளூர் மொழி பாடத்திட்டத்துடன் கூடிய ஒரு தடய அறிவியல் கல்லூரியையாவது உருவாக்க வேண்டும். இதன்மூலம் தடயவியல் விசாரணைக்குத் தேவையான பயிற்சி பெற்ற மனித வளத்தை நாம் பெற வேண்டும். மோடி அரசு அனைத்து உள்ளூர் மொழிகளையும், கலாச்சாரங்களையும் மதிக்கிறது.”

இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT