Skip to main content

சாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா! ஹிட்லர் பாணியில் அமித்ஷா!

 

amit shah


இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நீதி "பரிபாலன' முறையை மாற்றி எழுதும் தனது மறைமுகத் திட்டத்தை இந்த கரோனா காலத்தில் நேரடியாகச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு முழுமூச்சாக இருப்பதாக எச்சரிக்கை கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 

ஜூலை 4 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைத்துள்ள கமிட்டியின் அறிக்கை என்ற பெயரில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் செய்யப் போகும் மாறுதல்கள், திருத்தங்கள் அதற்கான பரிந்துரைகள் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில், இந்திய தண்டனை சட்டம் பற்றி 46 திருத்தங்கள் கொடுத்துள்ளது. இதுபற்றி கருத்து கூற 14 நாட்கள் என்றும் 200 வார்த்தைகளுக்குமேல் இருக்கக் கூடாது என்றும் அடுத்த 14 நாட்களில் கமிட்டி கூடி, பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் செய்து அதைச் சட்டமாக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு எவ்வகையான ஆபத்து என்பதை நம்மிடம் விரிவாக விளக்கினார் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன்.

 

"இப்போதும் நடைமுறையிலிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அரசியலமைப்பின் பன்முகத் தன்மையையும் சீர்குலைக்கும் ஒரு சதிச் செயலாகத்தான் பா.ஜ.க. அரசின் நடவடிக்கையைப் பார்க்க முடிகிறது.

 

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய காவல்துறை ஆராய்ச்சி மாநாட்டில் பேசும்போது, "ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்தோம். அடுத்து அயோத்தி வழக்கிலும் தீர்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலகத்தில் இந்தியாவை மூன்றாம் இடத்திற்குக் கொண்டு செல்லும். ஆனால் நமது வளர்ச்சிப் பாதைக்கு பல தடைகள் உள்ளது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டமும் அடக்கம்'' என்று பேசினார். "சட்ட கமிஷன் மாற்றி அமைக்க வேண்டும்'' என்றும் கூறினார்.

 

அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கமிட்டி அமைக்கிறது மறைந்த ராம்ஜெத் மலானி மகனும் பா.ஜ.க.வில் இருப்பவருமான மத்திய சட்டப் பல்கலைக்கழக கல்வியாளர் பாஜ்பாய் போன்று சில உறுப்பினர்களை கொண்டதாக அக்கமிட்டி உள்ளது. சட்டப் பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்வது என்றால் ஒரு சட்ட வல்லுநர் குழுதான் அதைச் செய்ய முடியும். ஆனால், அந்தக் கமிட்டியில் சட்டம் அறிந்த வழக்கறிஞர்களைச் சேர்க்காமல் கல்வியாளர்களைச் சேர்த்து உருவாக்குகிறார்கள் என்றால், அது பா.ஜ.க.வின் மறைமுக கொள்கை திட்டமாகத்தான் செயல்படும்.


இந்தக் கமிட்டியில் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற- உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதுறை ஆளுமைகளைக் கொண்டவர்களை உறுப்பினராக்கி இந்திய அரசியல் சட்டத்தை இன்றைய நவீன விஞ்ஞான உலகுக்கு தகுந்தாற்போல் திருத்தம் செய்யவேண்டும். ஆனால், அவகாசம் தராமல், அவசர அவசரமாகச் செய்யப்படும் திருத்தம் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். உதாரணத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தில், ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு திருத்தம் உள்ளது. அதாவது, போலீஸிடம் குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் சட்டப்பூர்வமானது என்கிறது இந்தத் திருத்தம். இது நீதிக்கு எதிரானது. போலீஸ் காவலில் எத்தகைய சித்திரவதைகள் இருக்கும் என்பதற்குச் சாத்தான்குளமே இன்றைய சாட்சி. அப்படிப்பட்ட சித்ரவதைகளால் வற்புறுத்தப்பட்டு வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்பூர்வமானது எனத் திருத்தம் செய்வது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அநீதியானது.

 

பா.ஜ.க. தன் கட்சிக் கொள்கைப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து உருவாக்கும் இந்தத் திருத்தங்கள் பலவும் சட்டத்தையும் அதிகாரத்தையும் முழுக்க முழுக்க போலீஸ் மயமாக்கும் திட்டமேயாகும். அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை- கருத்துச் சுதந்திரம் எல்லாம் உள்ளது ஆனால் தேசவிரோதி எனக் கைது செய்வார்கள். போலீசார் மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தைக் கொண்டே குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்க வழி செய்வார்கள். ஆட்சியை எதிர்ப்பவர்களை-உண்மையைச் சொல்பவர்களை இப்படி எளிதாக பழிவாங்க முடியும்.

 

http://onelink.to/nknapp

 

இந்தியாவின் பலமான அதிகாரமான நமது அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து விட்டால் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தலாம் என்பது பா.ஜ.க.வின் திட்டம். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது நமது பன்முகத் தன்மையைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் இப்போது நாடு முழுக்க இதை விவாதப் பொருளாக மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இணைந்து பேச வைத்துள்ளோம். இதுதான் நீதி என்று ஒரு கமிட்டி மட்டுமே கூற முடியாது 130 கோடி இந்திய மக்களின் சட்ட உரிமையைக் காக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்றார் விரிவாக.

 

இதன் தொடர்ச்சியாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ், அமித்ஷா போன்ற மத்திய உள்துறை அமைச்சர்களின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குள் செல்லும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஹிட்லர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது இந்தியா.