ADVERTISEMENT

பிரிஜ்பூஷண் சரண் சிங்; எஃப்.ஐ.ஆரில் வெளியான பகீர் தகவல்

12:43 PM Jun 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தகவல்கள் கசிந்துள்ளன. அதில், மூச்சு பரிசோதனை செய்வதாக கூறி வீராங்கனைகளின் ஆடைகளை கழற்றி அந்தரங்க உறுப்புகளை பிரிஜ் பூஷண் தொட்டதாகவும், வெளியூர் போட்டிகளின் போது ஓட்டல் அறைக்கு வீராங்கனைகளை தனியாக வருமாறும், பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் விளையாட்டில் சலுகை அளிப்பதாகவும், ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் வீராங்கனைகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் பதக்கம் வழங்கும் விழா உட்பட பல்வேறு சமயங்களில் வீராங்கனைகளை பிரிஜ்பூஷண் தகாத முறையில் தொடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக வீராங்கனைகள் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் இந்த கொடுமை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்வதாகவும் வீராங்கனைகள் 15 குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். தற்போது இந்த முதல் தகவல் அறிக்கை தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT