wrestlers have said that they will take legal action against Brij Bhushan Sharan

Advertisment

மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப்போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும்வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரர்களுடன் கடந்த 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

Advertisment

இந்த நிலையில் இனி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதில்லை என மல்யுத்த வீரர்கள்தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத்தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக், பஜிரங் புனியா, மத்திய அரசு உறுதியளித்தபடி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தக்கல் செய்துள்ளது. அதனால் சாலையில் இறங்கிப் போராடுவதை விட்டுவிட்டு இனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்டசில மணி நேரங்களிலேயே சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் இருவரும் சிறிது காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாகத்தெரிவித்துள்ளனர்.