ADVERTISEMENT

வேளாண் சட்டங்கள் வாபஸ்: 'அரசியல் ஞானி போன்று முடிவு' - மோடிக்கு அமித் ஷா, நட்டா புகழாரம்!

03:55 PM Nov 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு எழுந்துள்ள அதேசமயம், அடுத்து நடைபெறவுள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில தேர்தல்களை மனதில் வைத்தே இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பிரதமரின் முடிவை வரவேற்றுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த முடிவின் மூலம் பிரதமர் மோடி அபாரமான அரசியற்திறனை வெளிப்படுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் வேளாண் சட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் ஞானி போல முடிவெடுத்துள்ளார். பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியது போல், இந்திய அரசு நமது விவசாயிகளுக்குத் தொடர்ந்து சேவை செய்வதோடு அவர்களின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கும். பிரதமரின் அறிவிப்பில் தனித்துவமானது என்னவென்றால், இந்த அறிவிப்பை வெளியிட சிறப்பான நாளான குரு புரப்பை தேர்தெடுத்தார் என்பதாகும். மேலும் இது (அறிவிப்பு) ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர அவருக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதையும் காட்டுகிறது. அவர் அபாரமான அரசியற் திறனை வெளிப்படுத்தியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். அதுவும் இந்த அறிவிப்பு குருநானக் தேவ்ஜியின் பிரகாஷ் உத்சவ் என்ற சிறப்பு நாளில் வெளியிடப்பட்டுள்ளது. நமது விவசாயிகள் மீது அளப்பரிய அக்கறை தனக்கு இருக்கிறது என்பதை நமது பிரதமர் காட்டியுள்ளார். இந்த முடிவு நம் நாடு முழுவதும் சகோதரத்துவ சூழலை மேலும் அதிகரிக்கும். நரேந்திர மோடி அரசால் எடுக்கப்பட்ட நல்லாட்சி நடவடிக்கைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது கூட்டு உணர்வின் மூலம் வரவிருக்கும் காலங்களில் இந்தியாவை இன்னும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வோம்" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT