ADVERTISEMENT

கேப்டன் அமரீந்தர் சிங் கட்சியோடு கூட்டணியா? - பாஜக விளக்கம்!

09:44 AM Nov 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.

இந்தச் சூழலில் பஞ்சாப் அரசியலிலும் சூடு பிடித்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துவரும் நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கடும் சவாலை அளிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் காங்கிரஸிலிருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங், பாஜக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைக்க முயற்சிப்பேன் என அறிவித்துள்ளதும் அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், நேற்று (07.11.2021) பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில பாஜக தலைவர், பாஜக தனித்துப் போட்டியிட தயாராகிவருவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "117 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராகிவருகிறோம். பூத் மட்டத்தில் பணியாற்றுவது மற்றும் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது முதல் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய அனைத்தையும் செய்வோம்" என கூறியுள்ளார்.

அப்படியென்றால் கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியோடு பாஜக கூட்டணி வைக்கப்போவது இல்லையா என்ற கேள்விக்கு, "நாங்கள் 117 தொகுதிகளிலும் போட்டியிட தயாராவதில் கவனம் செலுத்திவருகிறோம். மற்ற கொள்கை முடிவுகளை எங்களின் நாடாளுமன்ற குழு எடுக்கும்" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT