ADVERTISEMENT

பாஜக எம்.பி மீதான பாலியல் புகார்; விசாரணைக் குழு அமைப்பு

06:09 PM May 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரணை குழுவானது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி இருந்தனர். இந்த போராட்டத்திற்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதையடுத்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 4 ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது. இதில் உச்சநீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு மல்யுத்த வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் மனுவின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இதனால் இந்த வழக்கை இத்தோடு முடித்து வைக்கிறோம். மேற்கொண்டு நடவடிக்கைகள் தேவை என்றால், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தையோ அல்லது உயர்நீதிமன்றத்தையோ மனுதாரர்கள் அணுகலாம்’ எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த குழுவில் 4 பெண் காவல் உயர் அதிகாரிகளும் அடங்குவர். இந்த வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். மேலும் அவரிடம் சில ஆவணங்கள் கேட்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக பிற மாநில போலீஸாரிடம் டெல்லி போலீசார் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வெளி நாடுகளிலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT