ADVERTISEMENT

பில்கிஸ் பானு வழக்கு; குஜராத் அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

03:42 PM Feb 14, 2024 | prabukumar@nak…

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு முன்கூட்டியே விடுதலை செய்திருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் கோத்ரா கிளை சிறையில் சரணடைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறிய கருத்தை மறு ஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,” “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து குஜராத் மாநில அரசுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு விசாரணையின் போது குஜராத் மாநில அரசுக்கு குற்றவாளிகள் விடுதலை கோரிய விவகாரத்தை தீர்த்து வைக்கும் அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் அடிப்படையிலேயே குஜராத் அரசு செயல்பட்டது. எனவே குஜராத் அரசுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் கூறிய கருத்துகளை நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT