ADVERTISEMENT

ராகுலின் லடாக் பயணத்தின் பின்னணி!

12:40 PM Aug 23, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாகப் பயணித்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி காஷ்மீரில் முடிவடைந்தது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டமான 370 நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கடந்த 17 ஆம் தேதி லடாக் சென்றிருந்தார். அங்கு லடாக் மக்களைச் சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி, லேவில் உள்ள குஷோக்கு பகுலா புட்சல் மைதானத்தில் 2023 ராஜீவ் காந்தி புட்சல் போட்டியின் இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். முதலில் இரண்டு நாள்களாகத் திட்டமிட்டிருந்த இந்த பயணம், பாங்காக் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலும் 4 நாள் தனது பயணத்தை நீட்டித்தார்.

கடந்த 19 ஆம் தேதி லேயில் இருந்து பாங்காக் ஏரி வரை சுமார் 130 கி.மீ தொலைவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதன் பின், மீண்டும் லே பகுதிக்குத் திரும்பிய ராகுல், அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்த பயணம், இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, ஜம்முவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லியில் ராகுல் காந்தி லடாக்கிலிருந்து ஒரு பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார். அப்போது, சீனாவுடனான எல்லை சவால்கள் மற்றும் உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து மக்களின் கருத்துகளை அவர் வந்து கேட்க வேண்டும் என்று அந்த பிரதிநிதி குழுக்கள் அழைப்பு விடுத்தது. அந்த குழுக்களின் அழைப்பை ஏற்று லடாக் வருவேன் என்று உறுதிமொழி அளித்தார். தற்போது ராகுல் காந்தி லடாக் சென்றிருப்பது அவர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காகத் தான். பல வழிகளில் இந்த லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சியாகும்” என்று கூறினார்.

இதனிடையே தனது லடாக் பயணம் குறித்து ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஒற்றுமை யாத்திரை ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. லே நகரில் ஒலிக்கும் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷம் இந்த ஒற்றுமைக்கு ஒரு வலுவான உதாரணமாக விளங்குகிறது. பாசமும், தோழமையும் நிறைந்த இந்த குரலை எந்த சக்தியாலும் அடக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT