rahul gandhi questions in china border issue

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் சீனா நுழையவில்லை எனக்கூறியதை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisment

லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ள நேற்று பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவுமில்லை ராணுவ நிலைகளைக் கைப்பற்றவுமில்லை. இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தப்பேச்சை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், இது இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக விமர்சனங்களை முன்வைத்தன. இந்நிலையில் பிரதமரின் இந்த பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "பிரதமர் இந்திய பகுதிகளை சீன ஆக்கிரமிப்புக்கு ஒப்படைத்துவிட்டார். நிலம் சீனாவின் பகுதி என்றால், அங்கு நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? அவர்கள் எந்த பகுதியில் கொல்லப்பட்டனர்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் பிரதமரின் இந்த பேச்சு தவறாகத் திசைதிருப்பப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.