ADVERTISEMENT

"மிசோரத்திற்கு செல்ல வேண்டாம்"- மாநில மக்களை எச்சரித்த அசாம் அரசு!

05:25 PM Jul 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த விவசாயிகளின் எட்டு குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இது திங்கட்கிழமை கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் இரு மாநிலங்களை சேர்ந்த மக்களும் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஐந்து அசாம் போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த கலவரத்தை தொடர்ந்து அசாம்-மிசோரம் எல்லையிலிருந்து இரு மாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டு, மத்திய துணை இராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், இரு மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை டி.ஜி.பி களுடனும் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் அசாம் அரசு, பயண ஆலோசனை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அசாம் மக்கள், மிசோரமிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக அந்த அறிவிக்கையில் "தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பொறுத்தவரை, அசாம் மக்கள் மிசோரமிற்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்படுகிறார்கள். ஏனெனில் மக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

மேலும் மிசோரமில் உள்ள அசாம் மக்களை மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படியும் அசாம் அரசு, அந்த அறிவிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்த அறிவிக்கையில், அஸ்ஸாம் மற்றும் மிசோரம் இடையேயான எல்லைப் பகுதிகளில் பல வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன என தெரிவிக்கப்ட்டுள்ளதோடு, மிசோ சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்களும், மாணவ மற்றும் இளைஞர் அமைப்புகளும் அசாம் மக்களுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT