ADVERTISEMENT

அத்வானி இல்லத்திற்கே வந்த ‘பாரத ரத்னா’ விருது!

01:26 PM Mar 31, 2024 | prabukumar@nak…

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்நிலையில் அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

முன்னாதாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்வானி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் தலைவரான அத்வானி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும், தனித்துவத்துடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். கடந்த 1927 ஆண்டு கராச்சியில் பிறந்த அவர், பிரிவினையின் காரணமாக 1947 இல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். பண்பாட்டு தேசியம் பற்றிய அவரது பார்வையும், அவர் பல தசாப்தங்களாக, நாட்டிற்காக முழுவதும் கடுமையாக உழைத்து, சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விவாதத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, துணைப் பிரதமராக இருந்தாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவருக்கு மரியாதையையும் பாராட்டையும் பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT