ADVERTISEMENT

30 மாத ஊதிய நிலுவை; 100க்கும் அதிகமான ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

09:55 PM Mar 28, 2023 | angeshwar

ADVERTISEMENT

அமுதசுரபி ஊழியர்களுக்கான 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் 3 ஆம் மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றம் செய்யப்பட்டது. இங்கு சந்தை விலையை விட மிகக்குறைவான விலையில் மளிகை, ஜவுளி மற்றும் மின்சார சாதனங்கள் ஆகிய பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் மாதக் கடனிலும் பொருட்களை விற்பனை செய்து லாபத்தோடு சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது.

ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீட்டால் அமுதசுரபி நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக பணியாட்களை நியமித்தது மற்றும் தனியார் கட்டிடங்களில் மாத வாடகைக்கு தேவையற்ற இடங்களில் கடைகளை திறந்து செயல்படுத்தியது போன்ற காரணங்களால் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கே கடந்த 30 மாதங்களாக ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எந்தவித பொருட்களும் இன்றி தற்போது வரை பெயரளவில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களின் 30 மாத நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும், அமுதசுரபி முழுமையாக இயங்காததால் மாற்றுப் பணி வழங்கிட வலியுறுத்தியும் அமுதசுரபி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கு முன்பாக மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை கட்டடத்தின் மேல் ஏறியும், பொதுப்பணித்துறை ஊழியர்கள் வாட்டர் டேங்க் மேல் ஏறியும், பாப்ஸ்கோ ஊழியர்கள் கடலில் இறங்கியும் போராட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து புதுச்சேரியில் பல்வேறு துறை ஊழியர்கள் நிலுவை சம்பளம் வழங்கக் கோரியும், துறை நிறுவனங்களை முறையாக நடத்தக் கோரியும் இதுபோன்று தற்கொலை மிரட்டல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT