ADVERTISEMENT

‘இந்தியா’ கூட்டணியின் மும்பை கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்பு 

04:44 PM Aug 30, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜுலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA- INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என பெயர் சூட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைக்க உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியா கூட்டணி சார்பாக ஆலோசனையில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே நாளை விருந்தளிக்கிறார். அதே சமயம் இந்தியா கூட்டணிக்கான இலச்சினையும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவேசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாக மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பேசுகையில், “இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. மும்பையில் நாளை முதல் 2 நாட்களுக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் ” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT