ADVERTISEMENT

ஸ்தம்பித்த அவைகள்... போராடிய எதிர்க்கட்சிகள்... நிறைவேறிய சர்ச்சைக்குரிய மசோதாக்கள் - முடிவுக்கு வந்தது குளிர்கால கூட்டத்தொடர்!

11:51 AM Dec 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இந்தக் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகள், பல்வேறு விவகாரங்களைக் குறிப்பாக லக்கிம்பூர் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை இரு அவைகளிலும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.

அதேபோல் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில், அவையின் மாண்பைக் குறைக்கும் விதமாக நடந்துகொண்டதாகக் கூறி 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் நடைபெற்றுவந்த குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், தங்கள் இடைநீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், இடைநீக்கத்தைத் திரும்பப்பெறக் கோரியும், லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரியும் எதிர்க்கட்சிகள் போராட்ட பேரணி நடத்தினர்.

இந்தக் குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே, ஏற்கனவே அறிவித்திருந்தபடி வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், சிபிஐ அமலாக்கத்துறை அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஐந்து வருடம்வரை நீட்டிக்கும் மசோதா, வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க வழிவகை செய்யும் மசோதா போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் நாளை முடிவடைவதாக இருந்த நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக முடிவுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT