ADVERTISEMENT

ரூ.1.97 கோடி நகைகள், 7 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகள் பறிமுதல்..! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..!

11:46 AM Mar 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதை அடுத்து பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் எல்லைப் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 1950 என்ற தேர்தல் அதிகாரியின் தடுப்பு எண்ணிற்கு நேற்று (14.03.2021) மாலை ரெட்டியார்பாளையம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

துணை தாசில்தார் முரளி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது, 45 புடவைகள் கொண்ட 30 பெட்டிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து புடவைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் புதுச்சேரி தேர்தல்துறை, கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து மாநில எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து, வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கதிர்காமம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி முகமது மன்சூர் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர், கோரிமேடு எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்குச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 5 சிறிய பெட்டிகளில் ரூ.1.97 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகள் அடுக்கி வைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது.

மினி வேனில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தமிழகத்தில் இருந்து புதுச்சேரி நகைக்கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து முறையான ஆவணங்கள் இல்லாததால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரைப்படி பறிமுதல் செய்தனர். பின்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் அப்ரஜித்தா சர்மா, முகமது மன்சூர் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT