Chief Minister Rangaswamy filed a budget of Rs 10,696.61 crore in Puducherry state!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அதேசமயம் மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.

Advertisment

காலை 9.45 மணிக்கு பேரவை கூடியதும், 2022 - 2023-ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இன்று முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்; கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு தனி துறையாக துவங்கப்படும். புதுச்சேரியில் தேசிய சட்டபல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார். 1,596 கோடி ரூபாய் மின் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இத்துறைக்கு ரூபாய் 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படகு துறை அமைக்கப்படும். காரைக்காலில் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி துவங்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள் சொத்துக்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கப்படும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடி வழங்கப்படும். ஆகியவை இடம்பெற்றன.