ADVERTISEMENT

காங்கிரஸிற்கு டாட்டா காட்டிய எம்.எல்.ஏக்கள் - அதிர்ச்சி அறிக்கை!

10:40 AM Mar 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, 2016 முதல் 2020 ஆண்டுவரை கட்சி மாறி தேர்தலில் நின்ற 433 எம்.பி/ எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கட்சி மாறி, தேர்தலில் போட்டியிட்ட எம்.பி - எம்.எல்.ஏ குறித்த சில அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்தப் புள்ளிவிவரப்படி 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை, 44.9 சதவீத எம்.எல்.ஏ-க்கள் வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதாவது கட்சி மாறி போட்டியிட்ட எம்.எல்.ஏக்களில் 182 பேர் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளனர். அதற்கடுத்தகாக 9.4 சதவீத எம்.எல்.ஏக்கள், அதாவது 38 பேர் வேறு கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

கட்சி மாறிய 405 எம்.எல்.ஏக்களில் 42 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதாவது 170 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிலிருந்து வேறு கட்சிக்கு மாறி, தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பாஜகவிலிருந்து 4 சதவீத எம்.எல்.ஏக்கள், அதாவது 18 பேர் வேறு கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளனர்.

2019 மக்களவை தேர்தலையொட்டி ஐந்து மக்களவை உறுப்பினர்கள் வேறு கட்சிக்குச் சென்று தேர்தலில் நின்றுள்ளனர். அந்த சமயத்தில் கட்சி மாறிய 12 மக்களவை உறுப்பினர்களில், ஐந்து பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளனர். மேலும் 2016 - 2020 ஆண்டு வரை 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் கட்சி மாறி போட்டியிட 16 மாநிலங்களவை உறுப்பினர்களில், 10 பேர் பாஜகவிற்காக போட்டியிட்டுள்ளனர். கட்சி மாறி போட்டியிடும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 39 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, எம்.எல்.ஏக்களின் கட்சி மாற்றத்தால், மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி என்ற ஜனநாயகத்தின் அடிப்படை வளைக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT