ADVERTISEMENT

இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தொடங்கி ஓராண்டு நிறைவு... எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..? 

03:11 PM Jan 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கப்பட்டது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்த தொடங்கப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், அதில் முக்கியமானது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது. இந்தியாவில், கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட இரண்டு மட்டுமே அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் இன்னும் கரோனா தடுப்பூசி குறித்த அச்சமும் தேவையற்ற வதந்திகளும் நிலவி வரும் நிலையில், மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. மேலும், வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டது. அதேசமயம் மக்கள் மத்தியிலும் தடுப்பூசியின் அச்சம் விலகி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினர். இதனால், தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் காரணமாக தடுப்பூசி இயக்கம் பெரும் வெற்றி அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 7ம் தேதி 150 கோடி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை எட்டியது.

இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதில் இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 68 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.

அதேபோல், கரோனா பரவலின் மாறுபட்ட திரிபுகளிலிருந்து காத்துகொள்ளவும், முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இதுவரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT