Skip to main content

இறப்பு விகிதத்தை மாற்றியமைத்த ஒற்றை தடுப்பூசி... கரோனா தடுப்பூசி முயற்சிக்கான நம்பிக்கை விதை...

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

vaccine

 

 

நம் அனைவரின் இடது கையின் மேலே ஒற்றை காசு போல ஒரு தழும்பு இருப்பதை கவனித்திருப்போம். அந்த தழும்பு ஏன் இருக்கிறது என்கிற கேள்வியும் குழப்பமும் நம் குழந்தைப் பருவத்தை பெருமளவு ஆட்கொண்டிருக்கலாம். அதன்பின்னர்தான், இந்த மனிதகுலத்திற்கு பல நூற்றாண்டுகளாக பெரும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திய பெரியம்மையை ஒழித்த தடுப்பூசியின் வடு அது என்று தெரிந்திருக்கக்கூடும். பலரையும் காவு வாங்கிய, குறிப்பாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பத்தில் எட்டு சிசுக்களைக் காவு வாங்கிக்கொண்டிருந்த இந்த கொள்ளை நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தான் அப்போதைய மனித குலத்தின் வேகமான சரிவை குறைக்க உதவியது என்றும் சொல்லலாம்.

 

18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மட்டும் வருடத்திற்கு நான்கு லட்சம் பேர் பெரியம்மையால் பலியாகியுள்ளனர். தற்போது கூட உலகை அச்சுறுத்தி வரும் கரோனா போன்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும், விரைவில் மனித குலம் இந்த அச்சுறுத்தலிலிருந்து விலகி உயிர்ப்புடன் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதும் இந்த முதல் தடுப்பூசியின் கண்டுபிடிப்புதான். தற்போது கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, இங்கிலாந்தில் பலருக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் கரோனா தடுப்பூசியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது.

 

இப்போது மருத்துவத் துறையில் பல மேம்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. பல கொள்ளை நோய்களுக்கு 19ஆம் நூற்றாண்டிலிருந்து பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதகுலத்திற்கு நம்பிக்கை தந்திருக்கிறது இவற்றிற்கெல்லாம் முன்னோடியான ஜென்னரின் ஆராய்ச்சி. ஏனென்றால் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தை யோசித்துப் பாருங்கள். மருத்துவத்துறையில் பெரிய அனுபவம் இல்லாத காலகட்டம், யாராவது ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினால் அது ஆபத்தானது இல்லை என்று நம்பவைப்பதே பெரும் தலைவலியாக இருக்கும் சமயம் அது. இந்தியாவில் போலியோ சொட்டு மருந்தை அனைத்து தரப்பு மக்களும் எடுத்துக்கொள்வதற்கு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியநிலை இருந்தது என்பது பலரும் அறிவர். அப்படி என்றால் 18ஆம் நூற்றாண்டில் எதையும் பொருட்படுத்தாமல் மக்களைப் பெரியம்மை என்னும் பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற எவ்வளவு பாடுபட்டிருப்பார் எட்வர்ட் ஜென்னர்.

 

அக்காலத்தில் பெரியம்மையிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்தவர்களுக்கு, அது நிரந்தர வடுக்களை கொடுத்தது. பலர் கண் பார்வை இழந்து, முகம் முழுவதும் பெரிய தழும்புகளுடன் இனி எப்படி வாழப்போகிறோம் என்று வேதனையில் துடித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மனவலிமை குன்றி தற்கொலைகளும் அதிகரித்தன. இதுமட்டுமல்லாமல் பெரியம்மையைவிடக் கொடுமையானது, அப்போது அதற்குக் கொடுக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைகள்.

 

அதிக வெப்பமயமான அறை அல்லது குளுமையான அறையில் அடைத்து வைப்பது, தர்பூசனி பழம் சாப்பிட்டுக்கொண்டே இருக்க நிர்பந்திப்பது, சிவப்பு துணியில் உடல் முழுவதையும் சுற்றிக்கட்டுவது போன்ற கொடூரமான சிகிச்சைகள் இந்நோய்க்கு வழங்கப்பட்டன. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்காக, சில இடங்களில் ஒரு நாளுக்கு 12 பாட்டில் பீர் வரை நோயாளிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான சிகிச்சைகளை தாங்கிக்கொண்டாலும் இறுதியில் உயிர்பிழைப்பது என்பது பெரும் சவாலாகவே இருந்தது. இதில் வேரியலேஷன் என்கிற மருத்துவ முறை ஓரளவிற்கு பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனால், இதன் பின்னும் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுவதும் குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையைத் தேடிக்கொண்டிருந்தனர்.

 

அந்த சமயத்தில்தான்  (18ஆம் நூற்றாண்டு) மேற்கு இங்கிலாந்தில் பெரியம்மை நோயால் பலரும் அவதிப்பட்டபோது, பசுக்களை பராமரிப்பவர்களை இந்த நோய் தாக்காதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனை உணர்ந்த விவசாயி பெஞ்சமின் ஜெர்ரி என்பவர் மாட்டின் மடியில் இருக்கும் மாட்டம்மையிலிருந்து சீழை எடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைக்குச் செலுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் பெரியம்மை நோய் தாக்கப்படாமல் தப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த தகவல் பெர்க்லி என்னும் சிறிய நகரத்தில் வசித்து வந்த மருத்துவர் எட்வர் ஜென்னருக்கு கிடைக்க, அவர் இதனைவைத்து பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிறு வயதில் பெரியம்மை நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையைக் கண்டு அஞ்சியதால், நம்முடைய முறை எளிதானதாகவும் மக்களைக் கண்டிப்பாக குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்துள்ளார் ஜென்னர்.

 

தனது நீண்ட ஆராய்ச்சிகளை முடித்த பின்னர், தன்னுடைய முதல் தடுப்பூசியை எட்டு வயது சிறுவன் ஜேம்ஸ் பிப்ஸுக்கு செலுத்திப் பரிசோதித்துப் பார்த்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிறு உடல்நிலை குறைபாட்டிற்குப் பிறகு குணமடைந்த ஜேம்ஸ்க்கு மீண்டும் பெரியம்மை நோய் தாக்கவில்லை. நோயால் தாக்கப்பட்டவர்கள் அருகில் அவர் சென்றாலும், அவருக்கு அருகில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் ஜேம்ஸ்க்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்ததால் பெரியம்மை நோய் தாக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் இந்த முறையில் ஒருவர் மீது நாம் சோதனை செய்து பார்ப்பது என்பது மருத்துவ நெறிமுறைப்படி முற்றிலும் தவறானது. ஆனால், அப்போது நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி பெரிதும் புரிதல் இல்லாத சமயத்தில் இதுகுறித்து யோசித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

 

மாட்டம்மைக்கு லத்தீனில் வேசினியா என்று பொருள். அதைவைத்து தான் வேசின் என்ற பெயர் உருவாகியுள்ளது. இந்த பரிசோதனை பலருக்கும் உதவியதை அடுத்து படிப்படியாகப் பல மருத்துவர்களிடமும் இது குறித்துத் தெரிவித்து, மக்களைக் காப்பாற்ற உதவியுள்ளார் ஜென்னர். அவர் இதைக் கண்டுபிடித்து பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை, பேட்டண்ட் வாங்கவும் இல்லை முழுக்க மக்களுக்கு உதவவே நினைத்திருந்தார். அதனால்தான் பெரியம்மை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட 20 ஆண்டுகளில் கடல் கடந்து பல நாட்டு மக்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்குள் பல லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பல நூற்றாண்டுகளாக மக்களை அச்சப்படுத்திய இந்த நோயை 1989ஆம் ஆண்டிற்குள் உலகிலிருந்து ஒழிக்கவும் முடிந்தது.

 

ஜென்னரும் அவர் கண்டுபிடித்த இந்த தடுப்பூசியும், அடுத்த தலைமுறையினரை மருத்துவத் துறையில் பெரிதும் மேம்படுத்தவும் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தியப் பல பெருந்தொற்றுக்களுக்கு சிறு பிஞ்சுகளையும், வயதானவர்களையும் பலி கொடுக்கவிடாமல் அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும், இன்னும் பல தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கவும் நம்பிக்கை விதையாக இருந்திருக்கிறது. 

 

 

Next Story

“காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” - உலக சுகாதார நிறுவனம் வேதனை 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

WHO President says about Gaza

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இந்த நிலையில், காசாவின் அவலநிலை குறித்து உலக சுகாதாரம் நிறுவனம் தனது வேதனையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கூறியிருப்பதாவது, “காசாவில் அனஸ்தீசியா (Anaesthesia) கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.