ADVERTISEMENT

அன்புமணிக்கு பிடிவாரண்ட்... நீதிமன்றம் அதிரடி...

11:09 AM Mar 23, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ், கடந்த 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்எல்ஏக்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் விதமாக, அன்புமணிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, இந்த வழக்கு விசாரணையில் அன்புமணி ஆஜராகாமலிருந்து வந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காலாவதியாகியுள்ள நிலையில், அவர் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி, அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாகவும், எனவே, ரத்து செய்த வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அன்புமணியின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், விழுப்புரம் அரசு வழக்கறிஞர் தரப்பில், வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவுகள் எதுவும் இதுவரை வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT