ADVERTISEMENT

“வெற்றிகரமான ஸ்பெயின் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

08:21 AM Feb 06, 2024 | prabukumar@nak…

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே நேற்று முன்தினம் (04.02.2024) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தனது ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப் (Gestamp), டால்கோ (Talgo) மற்றும் எடிபோன் (Edibon) ஆகிய தொழில்துறை நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் உற்சாகமான பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளோம். எடிபோனுடனான ரூ. 540 கோடி என்ற மிகப்பெரிய முதலீட்டில் ஒப்பந்தத்தை இறுதி செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நோயெதிர்ப்பு சிகிச்சையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேப்ட்ரீ (Mabtree) என்ற நிறுவனத்துடன் பயனுள்ள விதமாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஸ்பெயினுக்கான வெற்றிகரமான பயணம் இன்றுடன நிறைவடைகிறது. நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ்ச் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT