ADVERTISEMENT

ரஜினியை சந்திக்க முஸ்லீம் மதகுருமார்கள் திட்டம்! ஓ.கே. சொன்ன ரஜினி!  

11:34 AM Feb 27, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய தேசிய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்வைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சட்டத்தை ஆதரித்து பாஜகவினரும் களத்தில் குதிக்க, இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் கலவரமும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் 34 பேர் பலியாகியிருக்கிறார்கள். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



டெல்லியில் வெடித்த வன்முறை சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தை கண்டித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ’’ மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறையின் தோல்வியே வன்முறைக்கு காரணம். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இது போன்ற போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இது போன்ற போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும். சில அரசியல் கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. போராட்டத்தை எப்படி நடத்தினாலும் சட்டத்தை திரும்ப பெற மாட்டார்கள். டெல்லி போராட்டம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது‘’ என்று ஆவேசமாக பேட்டியளித்திருந்தார்.


ரஜினியின் இத்தகைய கருத்துக்கள் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மத்தியில் நேற்று (26.2.2020) இரவு நீண்ட விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில், முஸ்லீம் சமூகம் மற்றும் ஒட்டுமொத்த ஜமாத்துகளுக்கும் தலைமை பீடம் என கருதப்படும் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துக்கள் அதிர்ப்தியளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’போராட்டக்காரர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டும். ஜனநாயகரீதியாக போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்கிற பழியிலிருந்து அவர் விடுபட வேண்டும். அவரை சந்தித்து விளக்கமளிக்க உலமா சபை திட்டமிட்டுள்ளது‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலமா சபையின் துணை தலைவர் இலியாஸ், நேற்று இரவு ரஜினியை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘’உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் கருத்துக்கள் நியாயமானதுதான்’’ என அவர் சொல்ல, ‘’மத குருமார்கள் பலரும் உங்களை சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறோம்‘’ என்று சொல்ல, ’’நிச்சயம் சந்திப்போம்’’ என்று உறுதி தந்திருக்கிறார் ரஜினி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT