ADVERTISEMENT

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோல்வி அடைவார்: ராகுல் காந்தி பேட்டி

08:27 AM Apr 09, 2018 | rajavel


ADVERTISEMENT

மாநில கட்சிகள் தங்களின் சொந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சனிக்கிழமை கர்நாடகத்திற்கு வந்தார். 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

கர்நாடகத்தில் பா.ஜனதா என்ன வியூகங்கள் வகுத்தாலும் அந்த கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது. சித்தராமையாவின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஒரு வாய்ப்பை காங்கிரசுக்கு வழங்குவார்கள். மோடி, ஒரு திறமையற்ற தலைவர் என்பது சமீபத்தில் அவர் எடுத்த முடிவுகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வெறுப்பில் உள்ளனர். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும் கூட அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் யாரும் திருப்தி அடையவில்லை.


கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் சில தவறுகளை செய்துவிட்டோம். அதனால் தோல்வி அடைய நேர்ந்துவிட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியாக எடுத்துக்கூறவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் இப்போதைய பா.ஜனதா ஆட்சியை மக்கள் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியுள்ளனர்.

மாநில கட்சிகள் தங்களின் சொந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜனதா மட்டுமின்றி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே தோல்வி அடைவார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பப்படி பா.ஜனதா நடந்துகொள்கிறது. மத்திய அரசின் கொள்கைகளில் சங்பரிவார் கொள்கைகளை புகுத்துகிறார்கள்.

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார்கள். நான் அவ்வாறு எந்த தலைவரையும் தாக்கி பேசுவது இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் என்பது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நடைபெறும் கொள்கை யுத்தம்.

நாட்டில் காங்கிரஸ், பா.ஜனதாவை தவிர்த்து 3-வது அணி உருவாவது கடினம். மாநில கட்சிகள் ஒரு தலைவரை மையமாக கொண்டு செயல்படுகின்றன. அந்த கட்சிகள் கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவது இல்லை. அதனால் 3-வது அணி உருவாகாது. காங்கிரசுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு அணி அமைத்து செயல்பட்டால் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜனதா 100 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT