ADVERTISEMENT

மத்திய அமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடிதம்!

11:21 PM Dec 10, 2023 | prabukumar@nak…

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் பருத்தித்துறை அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை பருத்தித்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் மீது சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 25 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால், நேற்று (09-12-2023) சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்த கடிதத்தை மிகுந்த வருத்தத்தோடும் பதட்டத்தோடும் எழுதுகிறேன். காரைக்கால் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது மீன்பிடிப் படகையும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் டிசம்பர் 9 ஆம் தேதி சிறை பிடித்திருக்கிறார்கள். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்திருக்கிறார்கள்.

சிறை பிடிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமரின் வழிகாட்டுதலோடு மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை இராஜதந்திர முறையில் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அப்பாவி மீனவர்களை விடுதலையை செய்து அவர்கள் பாதுகாப்பாக அவர்களது குடும்பங்களுக்குத் திரும்ப வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT