ADVERTISEMENT

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி

11:24 AM Jan 09, 2024 | prabukumar@nak…

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ADVERTISEMENT

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ராஜேஷ்தாஸ் தரப்பில், “அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்ட நிலையில், அமர்வு நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். எனவே வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதம் முன் வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, “இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்து இந்த வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய ராஜேஸ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” என குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT