Skip to main content

ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Judgment date announcement in Rajesh Das case

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். வேண்டும். அதே சமயம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக இருந்த நிலையில் ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை. இந்நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Doctor Subbiah case High Court action verdict

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

Doctor Subbiah case High Court action verdict

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (14.06.2024) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Next Story

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
US President Joe Biden's son case related verdict

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக 2021 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், “எனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.