ADVERTISEMENT

6 பேருக்கு வாழ்க்கை கொடுத்த  தனலெட்சுமி !

11:25 PM Mar 18, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உறுப்பு தானம் செய்து 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்தார் இளம்பெண்.

ADVERTISEMENT

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் அய்யப்பன். சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தனலெட்சுமி (வயது 25). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான தனலெட்சுமிக்கு கடந்த 7-ந் தேதி உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொடர் வலிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே 7-ந்தேதி மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

பின்பு சுவாச கருவி உதவியுடன் அவருக்கு பிரசவ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர். மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றவர்களை போல வாழ முடியாது என்பதால் தனலெட்சுமியின் உடல் உறுப்புகளை தானம் வழங்கினால் அதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்று அவரது குடும்பத்தினரிடம் எடுத்து கூறினர். அதன்பிறகு தனலெட்சுமி உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனை டீன் அனிதா மேற்பார்வையில், தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கருணாகரன் தலைமையில் அறுவை சிகிச்சைக்குழு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தனலெட்சுமியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதில் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கல்லீரல் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 2 கண்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 பேர் வாழ்வு பெற்றனர். இதுவரை திருச்சியில் உடல்உறுப்புகள் தானம் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவ மனையில் மட்டும் நடந்து வந்தது. இப்போது முதல் முறையாக திருச்சி அரசு மருத்துவ மனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை நடந்ததுள்ளது.

முதல்முறையாக நடைபெற்ற உறுப்பு தானம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்.:-

தற்போது அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தானம் பதிவு மூப்பு அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. என்றார்.
இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி, டீன் அனிதா, கண்காணிப்பாளர் ஏகநாதன், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம் தனலெட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செய்தனார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT