ADVERTISEMENT

“பெரிய கட்சியான பா.ஜ.க வாக்குகளைத் திருடிவிட்டது” - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

04:23 PM Feb 02, 2024 | mathi23

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்தும், சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை கண்டித்தும் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சண்டிகர் மேயர் தேர்தலை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது. இந்த தேர்தல் மிகச்சிறிய தேர்தல் தான். ஆனால், உலகின் பெரிய கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க, வாக்குகளை திருடி வசமாகப் பிடிபட்டது. சண்டிகர் போன்ற சிறிய தேர்தலில் அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்றால், சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வளவு பெரிய குழப்பத்தை உருவாக்குவார்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அரசியல் கட்சிகள் வரும், போகும். தலைவர்கள் வருவார்கள், போவார்கள், இன்றைக்கு பா.ஜ.க ஆண்டுகொண்டு இருக்கிறது. நாளை வேறு யாராவது ஆட்சி செய்யலாம். ஆனால், ஜனநாயகத்தில் யாரும் விளையாடக்கூடாது. தேர்தலில் விளையாடுபவர்கள் ஜனநாயகத்திலும் விளையாடுவார்கள். பா.ஜ.க.வின் நடவடிக்கைக்கு எதிராக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையில் ஜனநாயகத்தை அழியவிடக்கூடாது” என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT