பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி கால,காலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, வெவ்வேறு வடிவங்களில். அது இன்றும் அப்படியேதான் இருக்கிறது, நவீனமயமாக்கப்பட்டு. இன்னும் சொல்லப்போனால் அது ஒருபடி மேலேயே சென்றுள்ளது. கடந்த சிலநாட்களாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகமாகியிருக்கிறது, ஏழு வயதான குழந்தை முதல், ஏழு மாதக் குழந்தைகள் வரை பாரபட்சமின்றி இந்த அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. 8 பேர் சேர்ந்து கர்ப்பிணி ஆட்டை கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளதாக என்று சிலநாட்களுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது காவல்துறையினரை மட்டுமல்ல, செய்தியைக் கேள்விபட்ட அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அந்தளவிற்கு ஆண்களின் மனநிலை கேவலமாகிவிட்டதா இல்லை அந்த அளவிற்கு பாலியல் வறட்சி இருக்கிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் விளையாடச் செல்லும் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவதேற்கே பயப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவணப் பணியகம் (NCRB) தகவலின்படி, 2014ம் ஆண்டில் 89,000க்கும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2015ம் ஆண்டில் 94000 அதிகமான வழக்குகளும், 2016ம் ஆண்டில் 1,00,000 ற்கும் அதிகமான வழக்குகளும், பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு தண்டனைகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் சிறப்புகளில் ஒன்று, இச்சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவருக்கு தெரியாதவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதைவிட, தெரிந்தவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை அதிகம். 12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் இனி தூக்கு தண்டனை வழங்கப்படும், முன் ஜாமீன் வழங்கப்படமாட்டாது என்று சட்டம் தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்களும், பாலியல் வன்முறைகளை தடுக்க அரசு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறதோ அதைவிட பத்து மடங்கு அதிகமாக ஒவ்வொரு தனிமனிதனும் தனது சுயஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற தொடர் தலைப்பில் உள்ளது போல் மாறிவிடும்.