Skip to main content

கொரோனா: 31ம் தேதி வரை விடுமுறை ஏன்? பின்னணி என்ன?

Published on 19/03/2020 | Edited on 19/03/2020
v

 

லக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத்தொடங்கியிருக்கிறது.  இந்த கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது.   மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகத்தான் தமிழக அரசும், இரண்டு வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.  இந்த இரண்டு வார கணக்கு என்பது எதன் அடிப்படையில்? என்ற கேள்வியை  டாக்டர் சரவணனிடம் முன் வைத்தபோது,

 

  ‘’சீனாவில் கூபே மாகாணத்தில் வுகா நகரத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த நகரத்தில் இறைச்சி சந்தையில் இருந்துதான் கொரோனா உருவானதாக கூறப்படுகிறது.   சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்த டாக்டர் லீ வென்லியாங் (34), கொரோனா தாக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

 

l


   
சீனாவில் உருவான இந்த வைரஸ் காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவிவிட்டது.  இந்த வைரஸ் உள்ளவர்கள் தும்மும்போது காற்றில் வைரஸ் பரவி கொஞ்ச நேரம் உலாவும்.  பின்னர் இது கீழே தரையில் அல்லது மற்ற பொருட்களில் அமர்ந்துவிடும். காற்றில் சில மணித்துளிகள் இருக்கும் இந்த வைரஸ் தரையில் சில நாட்கள் இருக்கும்.  நாம் கைப்பிடிகளையோ, டேபிளையோ தொடும்போது அதிலிருந்து அந்த வைரஸ் நம் கைகளில் தொற்றிக்கொள்ளும். கைகளால் நாம் கண்களையோ, மூக்கினையோ தொடும்போது வைரஸ் நம் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

 

இந்த வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரோஸ் என்கிற நிறுவனம் கொரோனோ வைரசை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனாலும் இது பயன்பாட்டுக்கு வர சில காலம் ஆகும்.  

 

டாக்டர் சரவணன்

s

 

பொதுவாகவே வைரஸ் கிருமியானது உடலுக்குள் இரண்டு வாரங்கள் இருக்கும்.   அப்புறம் அந்த கிருமி தன்னாலேயே போய்விடும்.   இரண்டு வாரங்களுக்கு அந்த நோயாளியை பாதுகாக்க வேண்டும்.  சளி இருந்தால், மூச்சுத்திணறல் இருந்தால் தக்க மருத்துவம் செய்து அவரை பாதுகாத்தால் இரண்டு வாரங்களுக்கு பின் அவர் குணமடைந்துவிடுவார்.  

 

இப்போது, மால்கள், சினிமா தியேட்டர்கள், பள்ளி,கல்லூரிகளை இரண்டு வாரங்களுக்கு மூடச்சொன்னது கூட,  கொரோனா வைரசை இரண்டு வாரங்களுக்கு பரவ விடாமல் செய்துவிட்டால், நிரந்தரமாக அதை விரட்டிவிடலாம் என்று கணக்கில்தான்.  

 

இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள்.  அவர்கள் கண்ட்ரோல் இல்லாமல் பல இடங்களுக்கு பயணம் செய்வதால்தான் இந்த நிலைக்கு ஆளானார்கள்.  அது மாதிரி இங்கேயும் இருக்க கூடாது என்பதற்குத்தான் இரண்டு வார விடுமுறை.  அலுவலகங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டு,  தொழிலாளர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யச்சொல்வதும் இதற்காகத்தான்.

 

கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  வீடு, வாசலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’’என்று விளக்கம் அளித்தார்.