Skip to main content

மனிதம் தழைக்குமா? - உயிர் வாழ போராடும் பாலஸ்தீனியர்கள்! 

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
palestine issue UN Condemn

காசாவில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் போர் இன்று (21ம் தேதி) 75வது நாளை எட்டியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தத் தகவல்கள் நிலைகுலைய வைப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்?

காசா பகுதியில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான யுத்தம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் 1,100க்கும் அதிகமான உயிர்களை இழந்த இஸ்ரேல், காசா மீது பதில் தாக்குதலைத் தொடங்கியது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழித்து ஒழித்த பிறகே இந்தப் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருந்து வருகின்றனர். 7,000க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 20,000க்கும் அதிகமானோர் காசாவில் கொல்லப்பட்டுள்ள நிலையில், தெற்கு நகரமான ரஃபா உட்பட காசா முழுவதும் வான்வழித் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இயல்பு வாழ்க்கையை இழந்த பாலஸ்தீனம்!

palestine issue UN Condemn

75 நாட்களாக நீடித்து வரும் இந்தப் போரால், 66% பாலஸ்தீனியர்கள் வேலை இழந்துள்ளதாகப் பாலஸ்தீனிய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கடுமையான உணவு பற்றாக்குறையில் காசா மக்கள் தவித்து வரும் நிலையில், தேவையான குடிநீரின்றி மாசுபட்ட நீரையே அவர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறிய ஐ.நா.வின் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல், "இதே நிலை தொடர்ந்து நீடித்தால், வரவிருக்கும் நாட்களில் இன்னும் பல குழந்தைகள் பற்றாக்குறை மற்றும் நோயால் இறக்க நேரிடும்" என வேதனை தெரிவித்துள்ளார். உணவு, தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் என்றால், போரில் உடல் பாகங்களை இழந்து உயிர் பிழைத்தவர்களின் நிலை மிகுந்த கவலையில் ஆழ்த்துகிறது. 

அத்துமீறும் இஸ்ரேல் ராணுவம்?

palestine issue UN Condemn

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் அந்த நகரமே ரத்தக்களரியாக காட்சியளிக்கிறது. இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட உயிரிழந்து வருகின்றனர். காசா மீது விழும் குண்டுகளின் சத்தங்களுக்கு இடையே, கட்டட இடிபாடுகளில் குழந்தைகளை அழைக்கும் தந்தையின் அழுகுரலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கதறலும் உலக மக்களின் இதயங்களை கனக்க வைக்கிறது. 

palestine issue UN Condemn

இந்தப் போரில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,586-ஐ கடந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போர் விதிமுறைகளையும் மீறி மருத்துவமனை பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நிராயுதபாணியான 11 பாலஸ்தீனிய இளைஞர்களை இஸ்ரேலிய படைகள் அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையில் கொன்றதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒரு அறைக்குள் அடைத்து கிரெனேட் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்

palestine issue UN Condemn

இப்போரில் இதுவரை 61 பாலஸ்தீனியப் பத்திரிகையாளர்கள் உட்பட 68 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 3 பத்திரிகையாளர்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை எனவும், 20 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது. போர் விதிமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவது, அவர்களது குடும்பத்தினர்கள் கொல்லப்படுவது, சைபர் தாக்குதல்கள், தணிக்கை என பத்திரிகையாளர்கள் காசாவில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

காசாவில் போர் நிறுத்தம்?

போர் காரணமாக 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இடம் பெயர்ந்து சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகின்றன. ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, புதனன்று(20ம் தேதி) எகிப்தின் கெய்ரோவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒரு புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்தபோது 90க்கும் அதிகமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 120க்கும் அதிகமான பிணைக்கைதிகளை மீட்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

palestine issue UN Condemn

"இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிகக் கடினமான நிலையை சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலால் உருக்குலைந்துள்ள பாலஸ்தீனத்தை பாதுகாக்க வேண்டும். நிரந்தர போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 7,000க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது உலக மக்களிடையே பெரும் வேதனையாக உள்ளது.