Skip to main content

சீமான் அணிவித்த மாலையை தூக்கி எறிந்து எதற்காக பாலாபிஷேகம் செய்தோம்.. ? - காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் பேட்டி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

jk

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு அப்பகுதியில் இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிழ்ச்சிக்குப் பிறகு அங்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாரன்ஸ் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், காமராஜர் சிலையைக் கழுவி சுத்தம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய லாரன்ஸ் அவர்களிடம் நாம் கேள்விகளை எழுப்பினோம்.

 

நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

"எங்களுடைய தலைவர் அன்னை சோனியா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரைப் பற்றி அவர் (சீமான்) தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துவருகிறார். நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கின்ற எங்கள் தலைவர் காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். நாட்டு மக்களுக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த ஒரு தலைவரை, பிரிவினை பற்றி பேசாத ஒரு தலைவரை, ஒற்றுமையை வலியுறுத்திய ஒரு தலைவரை இவர் மரியாதை செய்கிறேன் என்று கூறி அவமரியாதை செய்வதை நாங்கள் எப்படி பார்க்க முடியும். காமராஜரை நெருங்கும் தகுதி கூட சீமானுக்கு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அவ்வாறு அவர் மரியாதை செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

 

குறிப்பாக சீமான் வருவதற்கு முன்பாக நாங்கள் அங்கே சென்று எங்களின் எதிர்ப்பை பதிவுசெய்ய விரும்பினோம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி என்னைக் காவல்துறையினர் வீட்டுச் சிறையில் வைத்தனர். அதன் காரணமாக என்னால் அந்த இடத்திற்கு முன்னரே செல்ல முடியவில்லை. பிறகு அவர் சென்ற பிறகு எங்கள் கட்சியினரோடு நாங்கள் அங்கே சென்றோம். அவர் அணிவித்த மாலையை நீக்கிவிட்டு, நீரால் சிலையைக் கழுவி பாலை ஊற்றி சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தோம். தேச விரோத அவதூறு கருத்துக்களைத் தொடர்ந்து பேசும் சீமான், எங்கள் தலைவரைத் தொட்டு மாலை அணிவிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை. எனவே நாங்கள் அவ்வாறு செய்தோம். எங்கள் உணர்வு நியாயமானது. அந்த மேடையில் என்னென்ன பேச்சுக்கள் பேசப்பட்டது.

 

தவறான செயல்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயர் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர் இவரைப் போல் பிரிவினைவாத சக்தி அல்ல. அவர் அணிவித்த மாலை தவறானது என்ற நோக்கில்தான் நாங்கள் அவ்வாறு செய்தோம். வருங்கால இளைஞர்களிடம் நஞ்சை விதைக்கின்ற போக்கை அவர் மேற்கொள்கிறார். இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக குரல் கொடுத்துவருகிறது. அவர் மட்டும் ஏதோ குரல் கொடுப்பதைப் போல் பேசிவருகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று போராட்டங்களை அவர் அங்கு நடத்தியுள்ளார். ஏதோ கமிஷனை எதிர்பார்த்திருப்பது போல எங்களுக்குத் தெரிகிறது. எனவே அவர் அமைதியாக இருப்பது அவருக்கு மிக நல்லது" என்றார்.