Skip to main content

பகுத்தறிவால் போன உயிர்! துரோகத்தின் நாள்... 

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

கடந்த ஆண்டு இதே நாளில் கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள தன் வீட்டில் இரவு உறங்கிக்கொண்டு இருந்த ஃபாரூக்குக்கு அவருடைய பால்ய சிநேகிதர் ஒருவரிடமிருந்து போன் வந்தது. அந்த போனில், 'அவசரமாக வா, உன்னிடம் ஒரு விஷயம் பேசவேண்டி இருக்கிறது' என்று சொன்னவுடன், ஃபாரூக்கும் வீட்டில் இருந்து அவசர அவசரமாக கிளம்பியிருக்கிறார். ஃபாரூக்கின் மனைவி, "நள்ளிரவில் என்ன வேலை? எதா இருந்தாலும் காலை போய்க்கொள்ளுங்கள்", என்று கூறியிருக்கிறார். ஆனால், ஃபாரூக் அவர் பேசியதையும், குடும்பத்தார் பேசியதையும் கவனிக்காமல், நண்பர் கூப்பிட்ட இடத்துக்கு விரைந்தார். நண்பர் கூப்பிட்ட இடம், மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். ஃபாரூக் அந்த இடத்துக்குச் சென்றதும், அங்கிருந்த புதரிலும், இருட்டிலும் மறைந்திருந்த அவரது நண்பர்களும்,  உடனிருந்த சிலரும் அவர்கள் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை, கூரிய கத்திகளைக்கொண்டும் பாரூக்கை காட்டுமிராண்டித்தனமாக தாக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஃபாரூக் வலியால் துடித்து, கதறியிருக்கிறார். நண்பர்கள் அவரை பதினெட்டு முறை கத்தியைக்கொண்டு குத்தி தாக்கிய பின்னர், மூன்று மோட்டார் சைக்கிளிலும், ஆட்டோவிலும் ஓடிவிட்டனர். தாக்கப்பட்ட ஃபாரூக், துரோகத்தின் வலி தாங்க முடியாமல் கத்தி உயிர்விட்டார்.

 

farook



அவரை தாக்கிய அவரது நெருங்கிய நண்பர்களான அன்சத், சதாம் ஹுசைன், சம்சுதீன், அப்துல் முனாஃப், அக்ரம் ஜிந்தா, ஜாபர் ஆகியோர் அடுத்தநாள், உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களெல்லாம் ஃபாரூக்குக்கு நண்பர்கள், பதினைந்து வருட பழக்கம். அதிலும் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட மூன்று பேர் நெருங்கிய நண்பர்கள்.

நண்பர்களே சக நண்பனை கொன்று இருக்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்? அதுவும் பல வருட பழக்கவழக்கம் இருந்தவர்கள், என்றெல்லாம் யோசிக்கபட்டு இருந்தது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணம், ஃபாரூக் மதத்தை அவமதிப்பதாகவும், கடவுள் இல்லை என்று பரப்புரை செய்து பலரையும் நாத்திகத்துக்கு மாற்றி வருகிறார் என்பதே. ஃபாரூக்கை பற்றி விசாரிக்கையில், அவர் அடிப்படையிலேயே ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்திருக்கிறார். வயதாக ஆக, கடவுள் மறுப்பாளர்களையும் பகுத்தறிவாதிகளையும் தெரிந்து கொள்கிறார்.

 

farook killed


 

பெரியார் மீதும் திராவிடத்தின் மீதும் பற்றுக்கொண்டு, திராவிடர் விடுதலை கழகத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை இணைத்து கொள்கிறார். எந்த ஒரு கொள்கையும் தீவிரமடைந்தால், அதற்கு எதிர் மாறாக இருக்கும் ஒன்றை விமர்சிக்க செய்வார்கள், அதுதான் மனித இயல்பே. அதைத்தான் ஃபாரூக்கும் செய்திருக்கிறார். கடவுள் மறுப்பாளராகவும் மதக்கோட்பாடுகளை விமர்சித்தும் தன் நெருங்கிய நண்பர்களிடம் வாதம் செய்துகொண்டே வந்துள்ளார். பலமுறை அவரை சிலர் எச்சரித்தே வந்துள்ளனர். சமூக வலைதளங்களை கூட, ஃபாரூக் கடவுள் எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் பிரச்சாரப் பொருளாகவே பயன்படுத்தியுள்ளார். வாட்சப்பில் ஒரு குரூப்பை தொடங்கி பல கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட தன் சுற்றத்தினரை இணைத்துள்ளார். 'கடவுள் இல்லை' என்று பொருள்படும் பெயரை அந்த குழுவிற்கு வைத்துள்ளார். இது போன்ற பல காரியங்கள் அவர் நண்பர்களுக்கு பிடிக்காமல் போக, தங்கள் நண்பனையே கொன்றுவிட்டனர். இப்பொழுது ஃபாரூக்கின் மகளும் கடவுள் மறுப்பாளாராக வளருவதாக அவரது அம்மா கூறியிருக்கிறார்.  

கடவுள் மறுப்பாளர்களையும், மதக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் கொன்று குவிக்கவேண்டும் என்று நினைத்தால், இந்த இந்திய நாட்டில் 2011ஆம் ஆண்டின் கணக்குப்படி 30லட்சம் மனிதர்களை கொன்று குவித்தாக வேண்டும். இந்த எண்ணிக்கை இன்று பன்மடங்காகியிருக்கும். கருத்து என்பது ஒருவருடைய தனி விருப்பம், எங்கு வேண்டுமானாலும் அவர் அதனை தெரிவிக்கலாம் என்று இந்திய சட்டம் சொல்கிறது. எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி, அது உணர்த்துவது மனிதாபிமானத்தை தான். ஆனால், மதங்களை பின்பற்றுபவர்கள் சிலர் பல நேரங்களில் அதை மறந்துவிடுகின்றனர்.  

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.