Skip to main content

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்