Skip to main content

"தாக்குதலில் அடையாளம் தெரியாமல் போன திமுக தலைவர்கள்; கலைஞருக்குத் தகவல் தந்ததால் கண்காணிப்பில் சிக்கினேன்” - காந்தராஜ் பேச்சு

Published on 28/11/2022 | Edited on 29/11/2022

 

y

 

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு மறந்திருக்க முடியாது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அமலிலிருந்த இந்தச் சட்டத்தை அப்போது பதவியிலிருந்த இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் பெரிய அளவிலான களேபரங்கள் நடைபெறுவதற்கு மூலகாரணமாக இருந்த இந்த அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

 

இதன் அடிமூலம் எதிலிருந்து துவங்குகிறது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ். அவரிடம் இதுதொடர்பாக நாம் கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " நான் மருத்துவரா இருந்த காலத்தில் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தேன். அதற்காக ஒவ்வொரு வாரமும் என்னுடைய துறைத்தலைவர் என்னை அழைத்துச் செல்வார்.

 

ஆனால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பிறகு நான் சிறைக்குச் செல்லவில்லை. ஒரு 10 நாள் அந்த பக்கமே செல்லாமல் இருந்தேன். அதன்பிறகு என்னை மீண்டும் மருத்துவம் பார்க்க அழைத்தார்கள். இடைப்பட்ட இந்த நாளில் திமுகவில் உள்ள பெரும்பாலானவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்திருந்தார்கள். ஸ்டாலின், மாறன், ஆற்காடு வீரசாமி உள்ளிட்ட திமுகவின் பெரிய தலைகள் அனைவரையும் கைது செய்து சென்ட்ரல் ஜெயிலில் அடைத்து வைத்திருந்தனர். மாறன் தலைமறைவாக இருந்தார். ஆனால் கலைஞர் அவரைச் சரணடையச் சொன்னதையடுத்து அவர் ஹைதராபாத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 

 

நான் சிறைக்குச் சென்று பார்த்தபோது ஒவ்வொருவரின் நிலையும் வித்தியாசமாக இருந்தது. ஸ்டாலின் முகமெல்லாம் வீங்கியிருந்து. ஆற்காடு வீராசாமியை எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்குத் தாக்கியிருந்தார்கள். வலியும் வேதனையுடன் அவர்கள் எல்லாம் அங்கிருக்கிறார்கள் என்பதை யாரும் பார்த்த உடனே தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் நிலைமை இருந்தது. இதை அங்கே சென்று பார்த்தபோது எனக்கே கஷ்டமாக இருந்தது. ஸ்டாலினை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள். மருத்துவமனையின் நிலைமைகளை நான் கலைஞரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். நாளுக்கு நாள் அதிகார தாக்குதல் அதிகமாக அனைவரையும் அடக்கி ஒடுக்கியது.

 

குறிப்பாக எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்ற தொனியில் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தார்கள். இதற்கிடையே என்னையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். நான் தகவல்களை வெளியில் கூறுவதை மோப்பம் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தகவல் எனக்கு முன்கூட்டியே கிடைக்கப்பெற்றது. அதனால் நான் கொஞ்சம் உஷாரானேன். குறிப்பாக ஸ்டாலினைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திருமணம் முடிந்த கையோடு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சின்னப் பையனாக அவர் இருந்தார். இவர்களின் கொடுமையை அவர் பொறுத்துக்கொண்டுதான் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அங்கு இருந்து வந்தார். இவ்வாறு தமிழகத்தில் திமுகவைக் குறிவைத்து மிகப்பெரிய கைது நடைபெற்றது.