Skip to main content

கெட்டப்பையன் சார் இந்த மரடோனா... கம்யூனிசம் முதல் கால்பந்து வரை...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

maradona

 

கால்பந்தாட்டத்தின் கடவுள் ‘டீகோ மரடோனா’ உலகை விட்டுப் பிரிந்துவிட்டார் என உலகமே இன்று அழுதுகொண்டிருக்கிறது. என்னதான் சர்ச்சைகள் அவரை சூழ்ந்தே இருந்தாலும், ஆடுகளத்தில் எதிரணியையும் கால்பந்தையும் அவர் பந்தாடும் விதம் பலரையுமே ரசிக்க வைத்தது. பிளாக் பியர்ல் என்று அழைக்கப்பட்ட பீலே-வுக்கு அடுத்து லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சாதாரண பின்னணியைக் கொண்ட ஒரு இளைஞர், உலகையே தனது ஆட்டத்தால் கட்டிப்போட்டார் என்றால் அது டீகோ மரோடோனா தான். இவரை விளையாட்டு வீரர் என்று சொல்வதைவிட புரட்சிக்காரர் என்று சொல்வது சிறந்தது. அந்தளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், உலக அரங்கில் அதிகாரமிக்கவர்களால் ஒடுக்கப்படும் இனக் குழுக்களுக்குத் தனது ஆதரவையும் எப்போது தைரியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாடர்ன் உலகில் இவருடைய அரசியல் பார்வை மீது பலரும் பலவிதமாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால், அவர் நம்பிய ஒரு கொள்கையிலிருந்து பின் வாங்காமல் முடிந்தவரைக் குரல் எழுப்பினார்.

 

மரடோனா என்கிற கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார், தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைப் பலமுறை இந்த உலகிற்குத் தெரிவித்திருக்கிறார். கடவுள் பக்திமிக்கவரும் கத்தோலிக்க கிறிஸ்துவருமான டீகோ, ஜான் பால் இரண்டாம் போப்பை ஒருமுறை சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நான் வாட்டிகனில் இருந்தேன். தங்கத்தினாலான மேற்கூரையைப் பார்த்தேன். இதன்பின், ஏழை குழந்தைகளின் வாழ்வாதாரம் குறித்து தேவாலயம் வருந்துவதாக போப் என்னிடம் தெரிவித்தார். அப்படியென்றால், மேற்கூரையில் இருக்கும் தங்கத்தை விற்று எதையாவது செய்யுங்கள் நண்பரே என்றேன்” என்று கூறினார். இது சர்ச்சையானது, பெரியதாக விவாதத்தையும் கிளப்பியது.

 

ஃபிஃபா என்றழைக்கப்படும் கால்பந்தாட்ட அமைப்பில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து கேள்வி எழுப்பினார். கால்பந்து வீரர்களின் உரிமைக்காக, அப்போதைய பிரபல வீரர்களைக் கொண்டு அமைப்பு ஒன்றை உருவாக்கப் பல வருடங்களாகப் போராடினார். இதுகுறித்து அவர் 1995ஆம் ஆண்டு தெரிவிக்கையில், “ இந்த அமைப்புக்கான யோசனை வருவதற்குக் காரணம், மற்ற வீரர்களுக்கு என்னுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தத்தான். எங்களுடன் சண்டையிடும் வரை நாங்கள் யாரிடமும் சண்டையிடப்போவதில்லை” என்றார்.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் துணை நின்றவர் மரடோனா, அந்த வகையில் பாலஸ்தீனிய மக்களுக்காகவும் 2018ஆம் ஆண்டில் குரல் கொடுத்தார். “ என்னுடைய இதயத்தில், நான் ஒரு பாலஸ்தீனியரே”என்றார். இஸ்ரேல் அரசாங்கம் காஸா எல்லையில் நடத்திய வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 2015ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் கலந்துகொள்ள இருந்த பாலஸ்தீனிய அணிக்காக மரோடானா பயிற்சியளிக்க இருந்தார் என்று கூட புரளி கிளம்பியது.

 

maradona

 

 

சோஷியலிஸ்ட் மற்றும் இடதுசாரி அரசியல் கொள்கையைக் கொண்டவரான மரோடானா, கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர். ஃபிடலை தன்னுடைய இரண்டாவது தந்தை என்ற அளவில் மனதில் வைத்திருந்தார் மரோடானா. (அதனால்தான் என்னவோ நான்கு வருடங்களுக்கு முன்பு ஃபிடல் மறைந்த அதே நாளில் மரடோனா நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்) அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மரடோனா, தன்னுடைய நாட்டின் புரட்சியாளர், சே குவேராவின் பரம விசிறி. தன்னை தானே குவேரா எனவும் அழைத்துக்கொள்வாராம். அவரை ஏற்றுக்கொண்டதால்தான் டீகோ மரோடானாவுக்கு சோஷியலிஸ்ட் மற்றும் இடதுசாரி கொள்கையின் மீது நாட்டம் அதிகரித்து, அதை நம்பினார். உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலானார். தன்னுடைய கையில் சேவின் டாட்டூவையும், இடது காலில் ஃபிடலின் டாட்டூவையும் போட்டிருந்தார் டீகோ. அமெரிக்காவை எதிர்த்த வெனின்சுலா அதிபர் ஹியுகோ சாவஸிடம் நட்பு பாராட்டினார். ஒருமுறை அவர் தொகுத்து வழங்கிய பேட்டியில் அமெரிக்கா குறித்து பேசிய மரடோனா, “ அமெரிக்காவிலிருந்து வருவதை எவற்றையும் வெறுக்கிறேன். என்னுடைய முழு பலத்துடன் அதை வெறுப்பேன்” என்றார். ஈராக் போர் சமயத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு கிரிமினல் என்று அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்துகொண்டு கால்பந்தாட்டத்தைப் பார்க்க வந்தார். 

 

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போராட்ட குணம் கொண்ட ரெபலை போன்ற கால்பந்தாட்ட வீரரான டீகோ மரடோனா குறித்து விமர்சனம் செய்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் நம்பிய விஷயங்களுக்காகக் குரல் கொடுத்தார், போராடவும் செய்தார். இந்த போராட்ட குணம்தான் வறுமையிலிருந்து மீள அவருக்கு உத்வேகம் கொடுத்தது, கால்பந்தாட்டத்தில் எதிரணியை அச்சப்படச் செய்தது. தீர்க்கமான பேச்சு, துணிந்த செயல்பாடு, உறுதியான கொள்கைப்பிடிப்பு எனத் தன்னை வெறுப்பவர்களுக்கு எதிரில் 'கெட்ட பையன் சார் இந்த மரடோனா' என்பதைப் போலவே இறுதிவரை வாழ்ந்து மறைந்துள்ளார் மரடோனா.