Skip to main content

வைபவமா ஊரடங்கு? - ஆரூர் தமிழ்நாடன்

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

வைபவமா ஊரடங்கு?
- ஆரூர் தமிழ்நாடன்


சந்தைகளில் கூடிடவா 
ஊரடங்கு?
சத்தியமாய் இவரெல்லாம் 
திருந்தமாட்டார்!
மந்தைகளாய் திரிந்திடவா 
ஊரடங்கு?
மதியற்றோர் மரணத்தை 
வரவேற்கின்றார்!

*
நொந்தபடி நோய்ப்பட்டோர் 
உயிர்பிழைக்க
நொடிதோறும் போராடும் 
நிலையில்; இங்கே
வந்ததையும் போனதையும் 
வாங்கிச் சேர்க்கும்
வைபவமாய் ஊரடங்கை 
மாற்று கின்றார்.
*
 

5555



சிந்திக்கும் அறிவில்லை; 
கறிகாய் வாங்கச்
சிறுபடையாய்க் கடைகடையாய் 
ஏறுகின்றார்! 
வந்துள்ள ஆபத்தை 
உணர்ந்திடாமல்
வக்கணையாய் அசைவத்தைத் 
தேடுகின்றார்!

*
எந்தவொரு சிந்தனையும் 
இல்லாதாராய்
எங்கெங்கும் திரிகின்றார் 
வாகனத்தில்!
இந்தவொரு நெருக்கடியில் 
ஒன்றுகூடி
இன்னும்சிலர் வழிபாட்டில் 
இறங்குகின்றார்!
 

http://onelink.to/nknapp

 
*
விதவிதமாய் உண்பதற்கா 
ஊரடங்கு?
விபரீதம் நிலைமையினை 
உணர்வார் இல்லை!
பதமாகச் சுவையாகத் 
தின்பதொன்றே
பயன்மிக்க வாழ்வென்று 
கருது கின்றார்!

*
இதமின்றித் தெருவினிலே 
கூடிக் கூடி
இலக்கின்றி அரட்டையிலே 
மூழ்குகின்றார்.
வதம்செய்யும் நோய்த்தொற்று 
அக்கம் பக்கம்
வரும்வரையில் இவர்புத்தி 
தெளிவதில்லை!

*
நோய்த்தொற்றின் எண்ணிக்கை 
உயரும் போதும்
நுண்ணறிவு இல்லாமல் 
இருக்கலாமா?
வாய்க்கட்டும் மனக்கட்டும் 
சிறிதும் இன்றி 
வாழ்நாளை இருள்நோக்கி 
அனுப்பலாமா?

*
வாய்பிளந்து வருகின்ற 
ஆபத் துக்கு
வாய்ப்புதனைக் கொடுக்காத 
தெளிவு வேண்டும்!
நோய்த்தொற்று பரவாமல்  
இருப்பதற்கு  
நொடிதோறும் வீடடங்கி 
இருக்க வேண்டும்!
*

சார்ந்த செய்திகள்