Skip to main content

குவியும் புகார்கள்! சிக்குவாரா இ.பி.எஸ்?

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Complaints on edappadi palanisamiy

 

எடப்பாடி மீது தி.மு.க. அரசு தனது தாக்குதலை மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற டீலிங்குகள் எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைப் போலவே இந்த டீலிங்குகளில் எடப்பாடி எப்படி சிக்குவார் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கொடநாடு வழக்கை இழுத்தடிக்க தனக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மூலம் எடப்பாடி முயற்சி செய்ததைப் போல, தி.மு.க. அரசின் இந்த தாக்குதலையும் எடப்பாடிக்கு நெருக்கமான முத்தரசி என்கிற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மூலம் முறியடிக்க எடப்பாடி காய் நகர்த்தி வருகிறார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற கந்தசாமி மிகவும் நேர்மையானவர். அமித்ஷாவையே கைது செய்தவர். ஆனால், அவர் ஒரு விபத்தில் சிக்கி தனது நினைவாற்றலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தார். அதனால் அவரால் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளை தெளிவாகத் தொடுக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு தலைவராக இருக்கும் அபின் தினேஷ் மோடக்கை கொண்டுவரலாம் என ஆலோசிக்கப்பட்டது. மோடக் தற்பொழுது அண்ணாமலை டீமை, ஆருத்ரா உட்பட இருபதாயிரம் கோடி போலி நிதி நிறுவன மோசடிகளை விசாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 

சினிமா நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா மோசடியில் பதிமூன்று கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். அந்தப் பணத்தை அண்ணாமலைக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் பங்கு கொடுத்திருக்கிறார். தற்பொழுது ஆறு மாத டூரிஸ்ட் விசாவில் துபாய்க்கு சென்று தங்கியுள்ளார். காவல்துறை அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பதால் ஆறு மாதத்திற்கு மேல் அவரால் அங்கு இருக்க முடியாது. அவரை கைது செய்யும் வேலைகளில் அபின் தினேஷ் மோடக் பிசியாக இருப்பதால் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக நியமிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்தார்.

 

அதனால் அபய்குமார் சிங் என்பவர் கந்தசாமி ஓய்வுபெற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆனார். இவர்தான் தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார். எடப்பாடி மீது அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது தவறான விவரங்களை அளித்ததாக ஒரு புதிய வழக்கொன்று தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செல்வப்பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பொதுக்கணக்கு குழு சுகாதாரத் துறையில் ஒரு பெரிய ஊழல் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கண்டுபிடித்துள்ளது. இந்தப் புகாரும் லஞ்ச ஒழிப்புத் துறையால் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வழக்கு போடும் நிலைக்கு வந்திருக்கிறது.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவரும், பொதுக்கணக்கு குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, "அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக பல கோடி ரூபாய்க்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒரு கம்பெனி மூலமாக வாங்கப்பட்டுள்ளது. பத்து கம்பெனிகளின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி எடப்பாடி ஆட்சியில் கொள்ளை நடந்திருக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதன் விவரங்கள் விரைவில் வெளிவரும்'' என்றார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் நாம் கேட்டபோது, "அனிதா இம்பெக்ஸ் என்கிற கம்பெனி விஜயபாஸ்கர் காலத்தில் சுகாதாரத் துறையில் கோலோச்சியது. எடப்பாடிக்கும் விஜயபாஸ்கருக்கும் நெருக்கமான இந்த கம்பெனி தான் தற்போது அமைந்துள்ள தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கும் டெண்டரைப் பெற்றது. மிகவும் சுகாதாரமில்லாத மோசமான பொருட்களை இந்த கம்பெனி வழங்கியது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த கம்பெனிக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை நிலுவையில் வைக்கும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்த கம்பெனி பல்வேறு பெயர்களில் பல கோடி ரூபாய் டெண்டரில் அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையில் கான்ட்ராக்டுகளைப் பெற்றது. குறிப்பாக, கொரோனா காலத்தில் இந்த கம்பெனி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை தலைமையிலான பொதுக்கணக்கு குழு கண்டுபிடித்துள்ளது” என்றார்கள்.

 

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மெடிக்கல் தலைவராக இருந்தவர் தற்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கும் உமாநாத் ஐ.ஏ.எஸ். இவர் முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். மூலம் “இந்த ஊழல் தொடர்பான பைல்களை மாற்றுங்கள்” என தற்பொழுது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கூற, அவர் மறுத்துவிட்டார். அதனால் உமாநாத் சுகாதாரத் துறை செயலாளராக தன்னை நியமிக்கும்படி முதல்வரிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.